தருமபுரி, ஆகஸ்ட் 29:
தருமபுரி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேடியப்பன் சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழா கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து குமாரசாமிப்பேட்டையில் அமைந்துள்ள வன்னியர் மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து முளைப்பாரி மற்றும் புனித தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீ வேடியப்பன் சுவாமி திருக்கோயிலில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன. தொடர்ந்து ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதற்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதில் விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.
வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம்
ஆகஸ்ட் 28-ஆம் தேதி காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித தீர்த்தக் குடங்கள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் கோயில் கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அப்போது கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ வேடியப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீ வேடியப்பன் சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு திருக்கோயில் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
.gif)

.jpg)