தருமபுரி, ஆக.28:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே. சரவணன், இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின் பேரிலும், ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலும், தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அசைவ உணவகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மற்றும் தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட அதிகாரிகள், தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலை, பென்னாகரம் சாலை, ஓசூர்–சேலம் புறவழிச்சாலை மற்றும் புதிய பேருந்து நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
10 கிலோ பழைய இறைச்சி பறிமுதல்
ஆய்வின்போது மூன்று உணவகங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சமைத்த பழைய தந்தூரி இறைச்சி, சமைத்த கோழி இறைச்சி மற்றும் செயற்கை நிறமூட்டி பவுடர் கலந்த மசாலா தடவிய பச்சை இறைச்சி என சுமார் 10 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி ஊற்றி அழிக்கப்பட்டன.
மேலும், சில உணவகங்களில் இருந்து செயற்கை நிறமூட்டி பவுடர்கள், காலாவதியான பால் பாக்கெட்டுகள், பனீர் மற்றும் செயற்கை நிறம் ஏற்றப்பட்ட சோம்பு உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
5 உணவகங்களுக்கு ரூ.8,000 அபராதம்
இன்றைய ஆய்வில் 12-க்கும் மேற்பட்ட உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 5 உணவக உரிமையாளர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 3 உணவகங்களுக்கு தலா ரூ.2,000 வீதமும், 2 உணவகங்களுக்கு தலா ரூ.1,000 வீதமும் என மொத்தம் ரூ.8,000 அபராதம் விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் கண்டறியப்பட்டால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
சில்லி சிக்கன், மசாலா பவுடர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது
மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு உணவகத்தில் இருந்து சில்லி சிக்கன் மற்றும் பயன்படுத்தப்பட்ட மசாலா பவுடர் ஆகியவை பகுப்பாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. ஆய்வறிக்கை கிடைத்த பின்னர் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம் முழுவதும் உணவகங்களில் இதுபோன்ற தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்தார்.
.gif)

.jpg)