தருமபுரி, ஆக.28 :
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில இளைஞரின் புனித உடலை, அவரது குடும்பத்தினர் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் தங்களது உறவாகக் கருதி மை தருமபுரி அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர்.
சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டம் கோட்டியபால் கிராமத்தைச் சேர்ந்த சுக்காலுராம் மண்டாவி என்ற இளைஞர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கூலித்தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில் சாலையோரமாக நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சுக்காலுராம் மண்டாவி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதாக தெரியவந்த நிலையில், இளைஞரின் புனித உடலை தங்களது உறவாக எண்ணி இறுதிச்சடங்கு செய்ய மை தருமபுரி அமைப்பினர் முன்வந்தனர்.
இதையடுத்து சூளகிரி காவல் நிலைய காவலர் குமரேசன், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், கணேஷ் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் சுக்காலுராம் மண்டாவியின் புனித உடல் எரிவாயு தகன மையத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
240 புனித உடல்களுக்கு இறுதி மரியாதை
ஆதரவற்றோர் மற்றும் ஏழ்மையில் உயிரிழப்போரின் புனித உடல்களை தங்களது உறவாகக் கருதி நல்லடக்கம் செய்து வரும் மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 240 புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உறவுகள் கைவிட்ட நிலையிலும், ஏழ்மையில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதை அளித்து வரும் இந்த மனிதநேயப் பணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
.gif)

.jpg)