தருமபுரி, ஆக. 13:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தருமபுரி மாவட்டத்தில் சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள சங்கத்தின் மூலம், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதில் தேர்வு செய்யப்படும் 11 சிறந்த எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1,00,000 வீதம் நிதியுதவி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த நிதியுதவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதுடன், அவர்களின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியப் பங்களிப்புகளை மேலும் உயர்த்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
தகுதியுடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், இத்திட்டத்தின் கீழ் தங்களது படைப்புகளை சமர்ப்பித்து நிதியுதவிக்கான தேர்வில் பங்கேற்கலாம். விண்ணப்பப் படிவங்களை தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களில், வேலை நாட்களில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதுதவிர, தமிழக அரசின் இணையதளமான tn.gov.in மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தகுதியும் ஆர்வமும் உள்ள எழுத்தாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது படைப்புகளை உரிய முறையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)