Type Here to Get Search Results !

தருமபுரியில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு – விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி, ஜூலை 15:


தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினம்–2026 முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.


இந்தாண்டு "தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காகவும், திட்டமிடப்படாத கர்ப்பங்களைத் தடுப்பதற்காகவும், கர்ப்பங்களுக்கிடையே ஆரோக்கியமான கால இடைவெளியைப் பேணுவோம்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மக்கள் தொகை நிலைப்படுத்துதல், குடும்ப நலத் திட்டங்கள், பெண்கள் கல்வி, பெண் குழந்தை பாதுகாப்பு, இளவயது திருமணத் தடுப்பு, தாய்சேய் நலன் உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தும் உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க, அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து, தருமபுரி கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் குடும்ப நல விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.


பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் தாக்கங்கள், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளின் அவசியம், பெண்கள் கல்வி, ஆண்–பெண் சமத்துவம், இளவயது திருமணம் மற்றும் கர்ப்பத்தைத் தவிர்ப்பது உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு. பாரதி, துணை இயக்குநர் (காசநோய்) மரு. எம். பாலசுப்பிரமணியம், துணை இயக்குநர் (தொழுநோய்) மரு. விஜயலட்சுமி, புள்ளி விவர உதவியாளர் திருமதி அம்பிகா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திரு. வெ. அய்யந்துரை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies