பாலக்கோடு, ஜூலை 15:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஹள்ளி கிராமத்தில், பி-12 விவசாயிகளுக்கான உழவர் திருவிழா வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா, விதைச் சான்று உதவி இயக்குநர் மதியழகன் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) ராஜகோபால் பேசுகையில், நெல், கரும்பு, வாழை, தக்காளி, பூக்கள், கத்தரி, தென்னை, மா உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வரும் மானியத் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், சொட்டுநீர் பாசனத்தை நடைமுறைப்படுத்துதல், பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களைத் தடுக்க வேளாண்துறை பரிந்துரைக்கும் இடுபொருட்கள் மற்றும் மருந்துகளை பயன்படுத்துதல் குறித்து விளக்கமளித்தார்.
அத்துடன், கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய், எல்-நினோ தாக்கம், வறட்சி, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக வேளாண்மைத் துறை அதிகாரிகளை அணுகி உரிய ஆலோசனைகளையும் அரசின் நிவாரணத் திட்டங்களையும் பெற வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை அறிவியல் நிலையம், வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, மீன்வளத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், வேளாண்மை அலுவலர் அனுசியா, துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)