பென்னாகரம், ஜூலை 15:
தமிழ்நாடு அரசின் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தையும் நடத்தி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்தத் திட்டத்தின் நோக்கம், அரசு அலுவலர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண்பதுடன், அரசின் அனைத்து நலத்திட்டங்களும் தகுதியான பயனாளிகளுக்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதாகும். இதன் ஒரு பகுதியாக, ஜூலை மாதத்திற்கான முதல் கட்ட முகாம் பென்னாகரம் வட்டத்தில் ஜூலை 15 காலை 9 மணி முதல் ஜூலை 16 காலை 9 மணி வரை நடைபெற்றது.
பென்னாகரம் காரல் மார்க்ஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், பல்வேறு துறை அலுவலர்கள் தாங்கள் மேற்கொண்ட கள ஆய்வுகள், அரசு சேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தனர். பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, அரசின் அனைத்து திட்டங்களும் தகுதியான பயனாளிகளுக்கு தாமதமின்றி சென்றடைய உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மக்கள் குறைகளை நேரடியாக களத்தில் தீர்க்கும் வகையில் இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி மதுமதி, மாவட்ட வன அலுவலர் திரு. கா. இராஜாங்கம், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திரு. ஜார்ஜ், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) திருமதி பா. ஷெர்லி ஏஞ்சலா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)