Type Here to Get Search Results !

பாலக்கோடு சுற்றுவட்டார கிராமங்களில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் – தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்.


பாலக்கோடு, ஜூலை 8:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையால் காட்டு யானைகள் தொடர்ந்து கிராமங்களுக்குள் புகுந்து வருவதால், விவசாயிகளும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பாலக்கோடு அருகே உள்ள சீரியம்பட்டி, பெல்ரம்பட்டி, அண்ணாமலைஅள்ளி, பிக்கனஅள்ளி, கும்மனூர், காடுசெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை ஒட்டிய காப்புக்காடுகளில் இருந்து யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி விவசாய நிலங்களுக்கும் கிராமங்களுக்கும் வந்து செல்கின்றன. இதனால், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைவதுடன், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.


காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க வனத்தைச் சுற்றி யானைப் பள்ளங்கள் மற்றும் சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவை முழுமையாக அமைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று விவசாயிகள் காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.


இந்நிலையில், கடந்த சில நாட்களாக நான்கு காட்டு யானைகள் கூட்டமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி, காடுசெட்டிப்பட்டி, கும்மனூர், பெரியனூர், சூடானூர் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க போதுமான நிரந்தர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.


எனவே, காப்புக்காடுகளை ஒட்டிய பகுதிகளில் விரைவாக யானைப் பள்ளங்கள் அமைத்தல், சோலார் மின்வேலிகளை முழுமையாக நிறுவுதல் மற்றும் மனித–யானை மோதல்களை தடுக்கும் நிரந்தர திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கும் வனத்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies