அரூர், ஜூலை 19:
தருமபுரி மாவட்டம் பொய்யப்பட்டி அருகே இருசக்கர வாகனமும் தனியார் பால் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பொய்யப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அபிநாத் (20), மற்றும் இனியன் (19) ஆகிய இருவரும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் இன்று மாலை சுமார் 6 மணியளவில், இருசக்கர வாகனத்தில் பொய்யப்பட்டியில் இருந்து அனுமன்தீர்த்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பொய்யப்பட்டி அருகே உள்ள மேட்டு மாரியம்மன் கோவில் அருகில் எதிரே வந்த தனியார் பால் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த கோட்டப்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த இளைஞர்களின் உடல்களை கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.gif)

.jpg)