Type Here to Get Search Results !

தோட்டக்கலைப் பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு: விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு.


தருமபுரி, ஜூலை 16:


தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 2026–27ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை சீற்றங்களால் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், முதலமைச்சரின் உத்தரவின்படி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


எல் நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை குறையக்கூடும் என்ற சூழ்நிலையில், குறுவை பருவத்தில் வாழை, வெங்காயம், கத்தரி, வெண்டை, மஞ்சள் மற்றும் தக்காளி ஆகிய பயிர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு ஏக்கருக்கு வாழைக்கு ரூ.1,935, மஞ்சளுக்கு ரூ.4,200, வெங்காயத்திற்கு ரூ.2,122, கத்திரிக்காய்க்கு ரூ.749, வெண்டைக்கு ரூ.467 மற்றும் தக்காளிக்கு ரூ.1,771 காப்பீட்டு பிரீமியம் செலுத்த வேண்டும்.


அதிகபட்ச இழப்பீடாக வாழைக்கு ரூ.38,700, மஞ்சளுக்கு ரூ.84,000, வெங்காயத்திற்கு ரூ.42,700, கத்திரிக்காய்க்கு ரூ.30,100, வெண்டைக்கு ரூ.26,400 மற்றும் தக்காளிக்கு ரூ.37,600 வரை வழங்கப்படும். மகசூல் இழப்பு, விதைப்பு அல்லது நடவு செய்ய இயலாத நிலை, பயிர் வளர்ச்சி காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்கும் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.


வெங்காயம், தக்காளி, வெண்டை மற்றும் கத்தரி பயிர்களுக்கு காப்பீடு செய்ய 2026 ஆகஸ்ட் 31 கடைசி நாளாகவும், வாழை மற்றும் மஞ்சள் பயிர்களுக்கு 2026 செப்டம்பர் 15 வரை பதிவு செய்யலாம். கடன் பெற்ற விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பதிவு செய்யலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) அல்லது https://pmfby.gov.in இணையதளத்தின் Farmer Corner வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.


பதிவு செய்யும்போது விண்ணப்பம், அடங்கல் அல்லது விதைப்பு சான்று, வங்கி கணக்கு முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணம் செலுத்திய ரசீதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பதிவேற்றப்பட்ட பயிர் மற்றும் கிராம விவரங்களை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், துணை தோட்டக்கலை அலுவலர் அல்லது அருகிலுள்ள வங்கி கிளைகளை அணுகலாம். அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தவறாமல் பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies