தருமபுரி, ஜூலை 16:
தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசின் “தமிழ்நாடு உரிமைகள் திட்டம்” மூலம் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் கடைக்கோடி மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் 2 ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்களும், வட்டார அளவில் 10 சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலம் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, பேச்சு மற்றும் மொழி பயிற்சி, உளவியல் ஆலோசனை, கண் பரிசோதனை, சிறப்புக் கல்வி உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.
மேலும், 100-க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களின் தேவைகளை கண்டறிந்து, தேவையான மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் கிடைக்க வழிகாட்டி வருகின்றனர். கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தரமான சேவைகளை வழங்கி, அவர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் தகவல்களுக்கு தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது அருகிலுள்ள ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தை அணுகலாம். தொடர்புக்கு: 04342-230050, இலவச உதவி எண்: 1800 4250 111, சைகை மொழி உதவிக்கான வாட்ஸ்அப் எண்: 9498345350 என மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)