தருமபுரி, ஜூலை 15:
தருமபுரி நகரை ஒட்டி ஓடும் சனத்குமார் நதியை தூர்வாரி சீரமைக்க தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார்.
தருமபுரி அன்னசாகரம், பாரதிபுரம் மற்றும் ஏமக்குட்டியூர் பகுதிகளில் ஓடும் சனத்குமார் நதியை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீர்வளத்துறை உதவி கோட்டப் பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் மாலதி, நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், நகர அமைப்பு ஆய்வாளர் ஜெயவர்மன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, வத்தல் மலைப் பகுதியில் இருந்து உருவாகும் சனத்குமார் நதி சுமார் 46 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது என்றும், தற்போது நதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள், சாக்கடை கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டு குட்டை போன்ற நிலைக்கு மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். நதியை முழுமையாக தூர்வாரி சீரமைப்பதுடன், அதன் வழித்தடத்தில் உள்ள 8 தடுப்பணைகளையும் சீரமைத்து, தேவையான இடங்களில் புதிய தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்றார்.
தமிழக அரசு சனத்குமார் நதியை சீரமைக்க திட்டங்களை வகுத்திருந்தாலும், அதற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என்றும், உடனடியாக நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், மேகதாது அணை திட்டம் தமிழகத்தின் நீர்வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கர்நாடக அரசு அந்த அணையை கட்டக்கூடாது என்றும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது பாமக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஸ்வரன், அரசாங்கம், அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன், நகர செயலாளர் பூக்கடை ரவி, முன்னாள் எம்.பி. செந்தில், மாநில துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலச் செயலாளர் வேலுசாமி, மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், மாநில இளைஞர் சங்கச் செயலாளர் முருகசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)