Type Here to Get Search Results !

தருமபுரி ஆவின் பால் பதனிடும் ஆலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு – பால் விநியோகம், கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த அறிவுரை.


தருமபுரி, ஜூலை 14:


தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பதனிடும் ஆலையை மாவட்ட ஆட்சியர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின் போது, பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு மற்றும் தரம், குளிரூட்டும் இயந்திரங்களின் செயல்பாடு, பொதுமக்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் பால் உபபொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்து, அவற்றின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.


தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ் 245 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களும், 36 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாளொன்றுக்கு சராசரியாக 1,51,520 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 8,200 லிட்டர் பால் உள்ளூர் விற்பனைக்கு வழங்கப்பட்டு, மீதமுள்ள 1,43,320 லிட்டர் பால் சென்னை மாநகரின் தேவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.


மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு பால் தொகை மற்றும் ஊக்கத் தொகையை காலமுறைப்படி வழங்கவும், நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும், கால்நடை தீவனம் மற்றும் தாது உப்புக்கலவையை உறுப்பினர்களுக்கு வழங்கவும், பால் கொள்முதலை மேலும் உயர்த்தவும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.


இந்த ஆய்வின்போது தருமபுரி ஆவின் பொது மேலாளர் மருத்துவர் கி. மாலதி, துணைப் பதிவாளர் (பால்வளம்) திரு. மு. பார்த்திபன், ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பால்வளத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies