தருமபுரி, ஜூன் 28:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டியில், "We The Leaders – Lead The Change, அறம் செய்ய விரும்பு" என்ற முழக்கத்துடன் புதிய அலுவலக திறப்பு விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வழிகாட்டுதலின்படி, அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தென்னங்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சமூகப் பொறுப்புணர்வுடன் மக்கள் நலப் பணிகளில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்றும், சமூக மாற்றத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.பி. நரசிம்மன், அண்ணாமலையின் தலைமையில் தொடங்கப்பட்டுள்ள "We The Leaders" இயக்கத்தில் 15 நாட்களுக்குள் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பாலக்கோடு மற்றும் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த இயக்கத்தில் இணைந்து வருவதாகவும் கூறினார்.
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு உள்ளிட்ட பணிகளில் இந்த இயக்கம் செயல்பட்டு வருவதாகவும், அடுத்த கட்டமாக உறுப்பினர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்ததும் இந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்றும், எதிர்காலத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அண்ணாமலையின் தலைமையிலான புதிய அரசியல் சக்தி உருவாகும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சிக்கு எம்.கே. பிரதர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த பி. கணேசன் தலைமை வகித்தார். முனியப்பன், கமலேசன், கலைச்செல்வன், காரிமங்கலம் துரை, ஜிம் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் யாதவன், சுதர்சன், சண்முகம், சீனிவாசன், முருகன், சின்னசாமி, சக்திவேல், ராமன், கார்த்திகேயன், சசிகுமார், முனீஸ்வரன், வேல் ஓம் சக்தி, மணி உள்ளிட்ட நிர்வாகிகள், பிரியா, சித்ரா, மகேஸ்வரி, தாமரை, சங்கீதா உள்ளிட்ட மகளிர் நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)