தருமபுரி, ஜூன் 8:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.
இதையொட்டி ஸ்ரீ காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மலர்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த சிறப்பு வழிபாட்டில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் நெய் தீபம், சாம்பூசணிக்காய் தீபம், எலுமிச்சம் பழ தீபம் மற்றும் தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
மேலும், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் காலபைரவரை தரிசனம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர். விழாவையொட்டி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வருகையால் கோவில் வளாகம் முழுவதும் பக்தி மயமான சூழல் நிலவியது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)