தருமபுரி, ஜூன் 25:
தருமபுரி மாவட்டம் அதகப்பாடி பகுதியில் நேற்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு 14 நாட்கள் வணிகம் நடத்த தடை விதிக்கப்பட்டதுடன், மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்கும் நோக்கில் உணவு பாதுகாப்புத்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, இண்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதகப்பாடி பகுதியில் உதவி ஆய்வாளர்கள் மேற்கொண்ட சோதனையில், பென்னாகரம் சாலை மற்றும் ஒட்டிய வீதியில் செயல்பட்டு வந்த இரண்டு மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து இண்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் உத்தரவின்படி, இரண்டு கடைகளுக்கும் தலா 14 நாட்கள் வணிகம் நடத்த தடை விதிக்கப்பட்டதுடன், தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், இண்டூர் காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் முருகன், தலைமை காவலர் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து கடைகளை மூடி சீல் வைத்து, கடை உரிமையாளர்களிடம் அபராத ரசீது மற்றும் 14 நாட்கள் கடையை திறக்கத் தடை விதித்த உத்தரவு நகலை வழங்கினர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உணவு பாதுகாப்புத் துறையின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் அல்லது எஸ்.எம்.எஸ். எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.gif)

.jpg)