Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே கடத்திக்கொள்ளுமேடு கிராமத்தில் ஸ்ரீ மகாமாரியம்மன் - ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.


பாலக்கோடு, ஜூன் 18:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கடத்திக்கொள்ளுமேடு கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் மற்றும் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் ஆலயங்களின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


விழாவையொட்டி நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து புதிய விக்ரகங்களின் கரிகோல ஊர்வலம், ஆச்சார்ய அழைப்பு, பகவத் பிரார்த்தனை, யஜமானர் சங்கல்பம், புண்யாகவாசனம் உள்ளிட்ட பல்வேறு வேத சடங்குகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் அக்னி ஆராதனை நடத்தப்பட்டு கும்ப பிரதிஷ்டை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.


அதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் புதிய விக்ரக பிரதிஷ்டை, அஷ்டபந்தன சாற்றுதல், திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகசாலை ஹோமங்கள் நடைபெற்றன. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை யாகசாலையில் பல்வேறு வகையான ஹோமங்கள் மற்றும் பூர்ணாஹூதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித கலசங்களை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் தங்களது தலைமீது சுமந்து கோயில் கோபுர கலசங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.


அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர். கும்பாபிஷேக நிகழ்வைத் தொடர்ந்து கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.


பின்னர் அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் மற்றும் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


விழாவில் கடத்திக்கொள்ளுமேடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies