Type Here to Get Search Results !

பாலக்கோடு சர்க்கரை ஆலை குடியிருப்பில் ஸ்ரீ விஜயகணபதி – ஸ்ரீ பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு.


பாலக்கோடு, ஜூன் 18:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஜயகணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பழையூர் மாரியம்மன், ஸ்ரீ அஸ்வத்தநாராயண கோவிந்தராஜ பெருமாள், ஸ்ரீ ஐயப்பன், ஆஞ்சநேயர் மற்றும் நவகிரக திருக்கோவில்களின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து திருநெறி தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.


இந்த மகா கும்பாபிஷேக விழா நேற்று கொடியேற்றம் மற்றும் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், வேத பாராயணங்கள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, திருச்சுற்றுக் கலச நீராட்டு, ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, பேரொளி வழிபாடு மற்றும் பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பட்டாச்சாரியார்கள், ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தங்களது தலைமீது புனித கலசங்களை சுமந்து கோவில் கோபுர கலசங்களுக்கு கொண்டு சென்றனர்.


வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது பக்தர்கள் "அரோகரா" என பக்தி முழக்கமிட்டு சுவாமியை வழிபட்டனர். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனை பக்தர்கள் மிகுந்த பக்தி பரவசத்துடன் பெற்றுக்கொண்டனர்.


பின்னர் அருள்மிகு ஸ்ரீ விஜயகணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பழையூர் மாரியம்மன், ஸ்ரீ அஸ்வத்தநாராயண கோவிந்தராஜ பெருமாள், ஸ்ரீ ஐயப்பன் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தருமபுரி, பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி காலை முதலே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பிரசாதம் மற்றும் அன்னதானம் பெற்றுச் சென்றனர்.


இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies