தருமபுரி, ஜூன் 25:
தருமபுரி ராஜகோபால் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட 3-டிஜிட் லாட்டரி மற்றும் வெளிமாநில லாட்டரிகள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், கேரளா லாட்டரி, அசாம் மாநில டியர் (Dear) லாட்டரி மற்றும் ஹேப்பி (Happy) உள்ளிட்ட வெளிமாநில லாட்டரிகள் தினந்தோறும் அரசு விதிகளை மீறி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.கே. அருண் கபிலன் பொறுப்பேற்ற பிறகு, கள்ளச்சாராயம், கஞ்சா, ஹான்ஸ், குட்கா, சட்டவிரோத மதுபான விற்பனை உள்ளிட்ட குற்றங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த சில லாட்டரி கடைகள் மூடப்பட்டிருந்தாலும், விற்பனையாளர்கள் கடைகளுக்கு வெளியே நின்று மறைமுகமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், நாளொன்றுக்கு பலமுறை லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாகவும், சமூக வலைதளங்களிலும் லாட்டரி விற்பனை தொடர்பான காட்சிகள் வெளியாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சட்டவிரோத லாட்டரி விற்பனை பொதுமக்களை, குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை அதிகம் பாதிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை முற்றிலும் ஒழிக்க காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

.jpg)