தருமபுரி, ஜூன் 25:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் நலன் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் “அன்பு கரங்கள்” திட்டத்தின் கீழ், பள்ளிக் கல்வித்துறையின் ஒத்துழைப்புடன் பள்ளிகளில் உள்ள தகுதியான குழந்தைகளை அடையாளம் கண்டு திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தகுதியான குழந்தைகளை அதிகளவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி, குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே. அருண் கபிலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோ. விஜயா, மாவட்ட சுகாதார அலுவலர் இராஜேந்திரன், குழந்தைகள் நலக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, இளைஞர் நீதி குழும உறுப்பினர் கலைவாணி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் சவுதாமணி, சமூக நலத்துறை அலுவலர் பவித்ரா, முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)