தருமபுரி, ஜூன் 17:
தருமபுரியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற பாமக சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களிடம் பேசியபோது, போதைப்பொருள் பிரச்சினைகளுக்கு கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும் என தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'சிங்கப்பெண் அதிரடிப்படை' வரவேற்கத்தக்க முயற்சியாகும். இந்த படையில் அதிகளவில் பெண்கள் காவலர்களை தேர்வு செய்து, சிறப்பு பயிற்சிகள் அளித்து, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்" என்றார்.
மேலும், "போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுத்து நிறுத்தினால்தான் சமூகத்தில் ஏற்படும் பல்வேறு குற்றங்களுக்கு தீர்வு காண முடியும். கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் உள்ளிட்ட போதைப்பொருட்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றம் செய்பவர்களுக்கு உடனடி மற்றும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் வழக்குகள் முடித்து தண்டனை வழங்கும் சூழல் உருவானால் மட்டுமே குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும். சட்டத்தின் மீது அச்சம் இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து மொரப்பூர் – தருமபுரி புதிய ரயில் பாதை திட்டம் குறித்து பேசிய அவர், "சென்னையிலிருந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரயில் வசதி உள்ளது. ஆனால் தருமபுரிக்கு இன்னும் நேரடி ரயில் இணைப்பு முழுமையாக இல்லை. மொரப்பூர் முதல் தருமபுரி வரை சுமார் 34 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ரயில்வே அமைச்சரை 19 முறை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்" என்றார்.
"தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான புதிய ரயில் திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த திட்டத்திற்கு தேவையான நிதி மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். திட்டப்பாதையில் உள்ள நிலங்களை கையகப்படுத்தி உரிய நிவாரணம் வழங்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் குடியிருப்புகள் இருப்பதால் சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் மனிதநேய அடிப்படையில் தீர்வு காண வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
மேலும், "நில ஒதுக்கீட்டு பணிகள் நிறைவடைந்தால் இரண்டு மாதங்களுக்குள் திட்டப் பணிகளை தொடங்கவும், இரண்டு ஆண்டுகளில் ரயில் இயக்கவும் ரயில்வே துறையினர் தயாராக உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் புதிய ரயில் நிலையங்கள் உருவாகும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய முன்னேற்றமாக அமையும்" என்றார்.
தருமபுரி ரயில் நிலைய விரிவாக்கம் குறித்து பேசிய அவர், "பாமக ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த அரங்கவேலு முயற்சியால் தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது" என்றார். மேலும், "மொரப்பூர் – தருமபுரி ரயில் திட்டம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி, தொப்பூர் சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வளர்ச்சி திட்டங்களை பாமக முன்னெடுத்து வந்துள்ளது. தருமபுரி மாவட்டத்திற்கு மேலும் பல திட்டங்களை கொண்டு வர நாங்கள் தயாராக உள்ளோம்" என்றும் தெரிவித்தார்.
மாநில அரசின் நிதிநிலை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அரசின் வெள்ளை அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்து வருவதை பாமக தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது" என்றார். இந்த நிகழ்வில் பாமக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)