தருமபுரி, ஜூன் 17:
தருமபுரி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகள், குறைகள் மற்றும் அடிப்படை தேவைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக பெற்று விரைவான தீர்வு வழங்கும் நோக்கில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. புதிய அலுவலகத்தை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன், குத்துவிளக்கு ஏற்றி அலுவலகத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அலுவலக திறப்பு விழாவைத் தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை சட்டமன்ற உறுப்பினர் பெற்றுக் கொண்டார். குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, தெருவிளக்கு அமைத்தல், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள், அரசு நலத்திட்டங்கள், பட்டா தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.
ஒவ்வொரு மனுவையும் கவனமாக பெற்றுக்கொண்ட முனைவர் சௌமியா அன்புமணி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மனுக்களுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "தருமபுரி தொகுதி மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாக அறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்காகவே இந்த அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக தெரிவிக்கலாம். மக்கள் நலன் சார்ந்த அனைத்து கோரிக்கைகளும் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" என்றார்.
மேலும், தொகுதி மக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தி, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை விரைவாக செயல்படுத்த இந்த அலுவலகம் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி, மாநில துணைத் தலைவர் சாந்தமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம், பொதுமக்களின் கோரிக்கைகள் நேரடியாக பதிவு செய்யப்பட்டு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
.gif)

.jpg)