Type Here to Get Search Results !

போதைப் பழக்கம் மற்றும் வன்முறைக்கு எதிராக தருமபுரியில் நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.


தருமபுரி, ஜூன் 16:


போதைப் பழக்கம், குடும்ப வன்முறை மற்றும் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பாரத வெண்புறா இயக்கம் மற்றும் தருமபுரி மாவட்ட அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் சார்பில் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலைநன்மணி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பாரத வெண்புறா இயக்கத்தின் நிறுவனர் கலைமாமணி கதிர்வேலு முன்னிலை வகித்தார்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாட்டுப்புற கலைஞர்கள் பல்வேறு வேடமணிந்து நடனமாடியும், பாடல்களை பாடியும், கலை நிகழ்ச்சிகள் மூலமாக போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கஞ்சா, போதை ஊசிகள், போதை மாத்திரைகள், கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு தனிமனித ஒழுக்கச் சீர்கேடு, குடும்ப வன்முறை, சமூக அமைதி சீர்குலைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக கலைஞர்கள் எடுத்துரைத்தனர்.


மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரிப்பதற்கும் போதைப் பழக்கம் முக்கிய காரணமாக உள்ளதாக அவர்கள் வலியுறுத்தினர். போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் போதை குற்றங்களுக்கு எதிராக மேலும் கடுமையான சட்ட திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


அதேபோல், போதைப் பொருள் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மேல் முறையீடு இல்லாத வகையில் அதிகபட்ச தண்டனை வழங்கும் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. நாட்டுப்புற கலை வடிவங்கள் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies