தருமபுரி, ஜூன் 28:
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, மனநலப் பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளை பார்வையிட்ட அவர், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் மருத்துவ சேவைகள் குறித்தும் நேரடியாக கருத்துகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மனோகரன் மற்றும் மருத்துவர்களுடன் கலந்துரையாடிய சௌமியா அன்புமணி, மருத்துவமனையின் தற்போதைய செயல்பாடுகள், உள்கட்டமைப்பு தேவைகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தருமபுரி மாவட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டமாகும். அதேபோல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகளவில் உடல் உறுப்பு தானங்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. இது மிகவும் பாராட்டத்தக்கது. பொதுமக்களுக்கு தரமான மற்றும் மேம்பட்ட மருத்துவ சேவைகள் கிடைக்க மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளையும், சிகிச்சை சேவைகளையும் மேலும் உயர்த்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்றார்.
இந்த ஆய்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.
.gif)

.jpg)