Type Here to Get Search Results !

தருமபுரி வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்: அனைத்துத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் ப. ராஜ்குமார் ஆய்வுக் கூட்டம்.


தருமபுரி, ஜூன் 25:


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.


கூட்டத்தில் பேசிய அமைச்சர் ப. ராஜ்குமார், தருமபுரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது பெருமையுடன் கூடிய பொறுப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளான தரமான குடிநீர், மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், விவசாய பாதுகாப்பு, விவசாயம் சார்ந்த தொழில்கள் மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதில் அரசு முழு கவனம் செலுத்தும் என்றார்.


மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மொரப்பூர்–தருமபுரி புதிய ரயில் பாதைத் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் தொப்பூர் மலைப்பாதை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், மலைவாழ் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் பள்ளி இடைநிறுத்தம், குழந்தைத் திருமணம், இளம் வயது கர்ப்பம் போன்ற சமூகப் பிரச்சினைகளைத் தடுக்க கல்வித் துறையினர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், எல்-நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய வறட்சியை முன்னெச்சரிக்கையாக எதிர்கொள்ள நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் குறைந்த நீரில் விளையும் பயிர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


அலுவலர்கள் அலுவலகங்களில் மட்டும் இல்லாமல் களப்பணிகளிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், மக்கள் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊழல் மற்றும் தரமற்ற பணிகளுக்கு நிர்வாகத்தில் இடமில்லை என்றும் அமைச்சர் எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து, அதியமான் கோட்டையில் தொல்லியல் துறையின் சார்பில் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தருமபுரி அகழ்வைப்பகக் கட்டிடம், வள்ளல் அதியமான் கோட்டம் மற்றும் தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் 250 மாணவியர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டு வரும் சமூக நீதி மாதிரி கல்லூரி மாணவியர் விடுதி கட்டுமானப் பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் வெ. மரகதம் வெற்றிவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே. அருண் கபிலன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies