தருமபுரி, ஜூன் 25:
காவிரி ஆற்றில் வரும் நீரின் நிறம் பச்சையாக மாறியுள்ளதால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் குடிநீர் சுத்திகரிப்பு பணிகள் சுமார் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் வழியாக பாயும் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக வரும் நீர் பச்சை நிறத்தில் காணப்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் நீரில் கலப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
நீரில் அதிக அளவில் பாஸ்பேட் கலந்திருப்பதால் பாசி வளர்ச்சி அதிகரித்துள்ளதுடன், நீரின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சுத்திகரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் குடிநீர் விநியோக அளவு தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் குடிநீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி சிக்கனமாக கையாள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும் என்றும், வீட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீர் சேமிப்பு பாத்திரங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீரின் நிறம், மணம் அல்லது சுவையில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனடியாக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)