தருமபுரி மாவட்டத்தில் 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வெல்டிங் தொழிலாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (22) என்பவர், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி 7 வயது சிறுவனை விளையாட அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பயன்பாடின்றி இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே அழைத்துச் சென்று சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து நடந்த சம்பவத்தை வெளியில் கூறிவிடுவான் என்ற அச்சத்தில், சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. பின்னர் சிறுவனின் உடலை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பகுதியில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சிறுவன் காணாமல் போனதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சிறுவன் பிரகாஷுடன் சென்றது தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்து போக்சோ சட்டம் மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் 23 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணை நிறைவடைந்தது.
வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அசின் பானு, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஒரு தூக்கு தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக மேலும் ஒரு தூக்கு தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.gif)

.jpg)