தருமபுரி, ஜூன் 5:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மாபெரும் மரக்கன்று நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., நல்லம்பள்ளி வட்டம் சேசம்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே தொடங்கி வைத்தார். பூமியையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளாக பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்பது வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பசுமை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி, மொரப்பூர், ஏரியூர், கடத்தூர், தருமபுரி, அரூர் மற்றும் பாலக்கோடு ஆகிய 10 வட்டாரங்களில் உள்ள 185 இடங்களில் 46,570 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
மேலும், பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி வளாகங்களில் 1,478 மரக்கன்றுகளும், வனத்துறை சார்பில் 5,775 மரக்கன்றுகளும், பிற அரசு துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 8,252 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன. இதன்மூலம், தருமபுரி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மொத்தம் 62,075 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளில் நாவல், நெல்லி, பாதாம், கொய்யா, சீத்தாப்பழம், பலா, கொடுக்காப்புளி, அத்தி, இலந்தை, விளாம்பழம், மா உள்ளிட்ட 22,825 பழமரக் கன்றுகளும், வேம்பு, புங்கன், மகாகனி, புளியன், பூவரசு, தேக்கு, வில்வம், இலுப்பை, அரசு, மருதம், வேங்கை உள்ளிட்ட 39,250 பிறவகை மரக்கன்றுகளும் அடங்கும்.
மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல், அவற்றை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும் என்றும், புவி வெப்பமயமாதலை குறைக்கவும், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை தடுக்கவும் மரம் வளர்ப்பு மிக முக்கியமானது என்றும் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விமல் ரவிக்குமார், நல்லம்பள்ளி வட்டாட்சியர் பிரசன்ன மூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)