Type Here to Get Search Results !

உலக சுற்றுச்சூழல் தினம்: பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் – சமத்துவபுரம் கிராம சபையில் மாவட்ட ஆட்சியர் அறிவுரை.


தருமபுரி, ஜூன் 5:


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தின் 249 கிராம ஊராட்சிகளிலும் “தூய்மையான கிராமம், பாதுகாப்பான காலநிலை” என்ற தலைப்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக சமத்துவபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தல், மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், கிராமங்களின் வளர்ச்சியே மாவட்ட வளர்ச்சிக்கான அடித்தளம் என்றும், அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், கிராமங்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தால் சிறந்த ஊராட்சிக்கான விருதுகளை பெறும் வாய்ப்பு உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.


பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகளை பயன்படுத்தக் கூடாது என்றும், கடைகளுக்கு செல்லும் போது “மீண்டும் மஞ்சப்பை” என்ற எண்ணத்துடன் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


துணிப்பைகள், காகிதப் பொருட்கள் மற்றும் பாக்குமட்டை தட்டுகளை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றும், பிளாஸ்டிக் பொருட்கள் நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதுடன், மனிதர்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் தெரிவித்தார்.


மேலும், அனைத்து வீடுகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என்றும், கிராம ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள தூய்மை காவலர்கள் மூலம் குப்பைகள் முறையாக சேகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். காலநிலை மாற்றம் உலகளாவிய சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைத்து வீடுகளிலும் அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றின் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். முன்னதாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணிப்பைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விமல் ரவிக்குமார், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் பாத்திமா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் பிரசன்ன மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies