பாலக்கோடு, மே.15:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் சின்னேகவுண்டனஅள்ளி கிராமத்தில் உள்ள தூள்செட்டி ஏரியை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் 15.05.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காவேரி வடிநிலம் மற்றும் சின்னாறு உப வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள இந்த பழமையான முறைசாரா ஏரி, சுமார் 19.94 சதுர கிலோ மீட்டர் நீர்பிடிப்பு பரப்பளவு மற்றும் 39.28 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த ஏரியின் மூலம் சுமார் 395 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அலியாளம் அணைக்கட்டிலிருந்து தூள்செட்டி ஏரிக்கு நீர் வழங்கும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். புதிய கால்வாய் அமைத்து தென்பெண்ணையாற்றின் உபரி நீரை 12 ஏரிகள் மற்றும் தூள்செட்டி ஏரிக்கு கொண்டு செல்லும் திட்டத்தின் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கம்மாளப்பட்டி ஊராட்சியில் உள்ள வெங்கட்ராம அய்யன் குட்டை ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கரை பலப்படுத்தும் பணிகள் மற்றும் 180 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர், மூங்கில்பட்டியில் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொது நீருந்து நிலையத்தையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். பம்பிங் நிலையத்தின் செயல்பாடு, மோட்டார்கள், பம்புகள், பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.
இந்த நிலையத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 85 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்க தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)