பாலக்கோடு, மே.15:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2020ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த அரசு மதுபானக் கடை, பள்ளி அருகே அமைந்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இரவு நேரங்களில் மது அருந்த வருபவர்கள் பள்ளி வளாகத்திலேயே அமர்ந்து மது அருந்தி, காலி மதுபாட்டில்களை உடைத்து வீசிவிட்டு செல்வதாகவும், இதனால் பள்ளி மாணவர்களின் கால்களில் கண்ணாடித் துகள்கள் காயம் ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்துபவர்கள் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் செல்லும் போது ஆபாசமாக பேசி தொந்தரவு அளிப்பதாகவும், அரை நிர்வாணமாக நடந்து கொள்வதால் அச்சத்துடன் பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, தமிழக முதல்வர் உடனடியாக இக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)