பென்னாகரம், மே. 02:
கோடைகாலத்தை முன்னிட்டு பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையரின் உத்தரவின் பேரில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார் மேற்பார்வையில், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையிலான குழுவினர் பென்னாகரம், வண்ணாத்திப்பட்டி, எட்டியாம்பட்டி, கடமடை, கலப்பம்பாடி, பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் தயாரிப்பு இடங்களின் சுகாதாரம், மூலப்பொருட்களின் தரம், லேபிள் விவரங்கள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டன. மேலும், குளிர்பானங்கள் தயாரிக்க பாதுகாக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்த வேண்டும் என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மொத்த விற்பனை நிலையத்தில் லேபிள் விவரங்கள் இல்லாத ஐஸ் டியூப் பானங்கள் கண்டறியப்பட்டதால் அவை அகற்றப்பட்டு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. எட்டியாம்பட்டியில் லேபிள் விதிமுறைகள் பின்பற்றாத குடிநீர் பாட்டில்கள் கண்டறியப்பட்டதால் ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் மில்க்ஷேக் தொடர்பான புகாரின் அடிப்படையில் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. தவறுகள் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். பழக்கடைகள் மற்றும் குளிர்பான விற்பனையாளர்கள் சுகாதாரத்தை கடைப்பிடித்து, தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும், நேரடி வெயில் படாமல் பொருட்களை பராமரிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)
.jpg)
.jpg)