Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி டாஸ்மாக் தொழிலாளர் பலி; டாஸ்மாக் கடை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்.


பாலக்கோடு, மே. 03:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சூடப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (45) என்பவர், தண்டுக்காரனஹள்ளியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான (டாஸ்மாக்) கடையில் தினக்கூலி தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம்போல் லாரியிலிருந்து காலி மதுபான பாட்டில்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, கடையின் மேற்புறம் தாழ்வாக சென்ற மின்கம்பி எதிர்பாராத விதமாக மாதேஷை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, மாதேஷின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாதேஷின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்விச்செலவை அரசு ஏற்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும், டாஸ்மாக் அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்து கோஷமிட்டனர்.


தகவல் அறிந்து வந்த பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) ராஜசுந்தர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், உரிய நியாயம் கிடைக்கும் வரை மாதேஷின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies