Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு முதியவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


பாலக்கோடு, மே.05:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு முதியவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜக்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனுசாமி (71), தனது 3 ஏக்கர் நிலத்தில் தென்னை மற்றும் மா மரங்களை வளர்த்து வந்தார். நிலத்திலேயே வீடு அமைத்து வசித்து வந்த அவர், அருகில் மாட்டு கொட்டகையும் அமைத்து கறவை மாடுகளை வளர்த்து வந்தார்.


நேற்று மாலை பலத்த சூறாவளி காற்று வீசியதில், மாட்டு கொட்டகை அருகே சென்ற மின்கம்பத்தில் தென்னை ஓலை விழுந்து மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது. இதை அறியாமல் கால்நடைகளுக்கு தீவனம் வைக்க சென்ற முனுசாமி, கீழே விழுந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்து அருகில் இருந்த தோட்ட தொழிலாளி பிடமனேரியை சேர்ந்த துரைசாமி (60) ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்ற போது, அவருக்கும் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் உயிரிழந்தார்.


இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டிக்கச் செய்தனர். தகவல் அறிந்து வந்த மகேந்திரமங்கலம் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies