தருமபுரி, மே.16:
தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், கோயம்புத்தூர் இணைந்து கரும்பு விவசாயிகளுக்கான விளக்கவுரை மற்றும் செயல்விளக்க பயிற்சியை எண்ணப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கரும்பு வயலில் ஏற்பாடு செய்தது. கரும்பு சாகுபடியை ஊக்குவிப்பதுடன், தற்போது அதிகளவில் பரவி வரும் வேர்ப்புழு தாக்குதலை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி 15.05.2026 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் திரு. வீ. இரவி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் விஞ்ஞானிகள், கரும்பு பயிரில் வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்தனர். மேலும், அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், கோயம்புத்தூரை சேர்ந்த விஞ்ஞானிகள் முனைவர் செ. சங்கர நாராயணன் மற்றும் முனைவர் பி. முரளி ஆகியோர், உயிரியல் முறையில் “என்ட்மோ பேதோஜெனிக் நெமடோட்” (நூற்புழு கொல்லி) பயன்படுத்தும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
மேலும், மின்விளக்கு பொறி மூலம் வேர்ப்புழு வண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும் என்றும், ஏக்கருக்கு இரண்டு கிலோ அளவில் நூற்புழு கொல்லி மருந்தை தண்ணீரில் கலந்து வேர்ப்பகுதியில் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். தண்ணீர் பற்றாக்குறை நிலவின் போது குளோரோபைரிபாஸ் மருந்தை பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தினர். இந்த பயிற்சியில் ஏராளமான கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் கரும்பு பெருக்கு அலுவலர்கள், கரும்பு அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)