Type Here to Get Search Results !

ஊரக வேலை உறுதியளிப்பு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தருமபுரி, மே.15:


தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர்கள் சார்பில், புதிய கிராமப்புற வேலை உத்தரவாத திட்டத்தை ரத்து செய்து பழைய MGNREGA திட்டத்தை தொடர வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டதன் மூலம் கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகரித்து, பெண்களுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு கிடைத்ததால் குடிபெயர்ச்சி குறைந்ததுடன், அரசு பள்ளிகளில் மாணவர்களின் இடைநிறுத்தமும் குறைந்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


ஆனால், 2025 டிசம்பர் 21ஆம் தேதி ஒன்றிய பாஜக அரசு “VB GRAMG(G)” என்ற புதிய கிராமப்புற வேலை உத்தரவாத திட்டத்தை அறிமுகப்படுத்தியதால் நாடு முழுவதும் 15 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.


இதனால் புதிய திட்டத்தை ரத்து செய்து MGNREGA திட்டத்தை தொடர வேண்டும், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை மற்றும் ரூ.700 தினக்கூலி வழங்க வேண்டும், அரசு ஊழியர்களைப் போல ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்க வேண்டும், வேலைக்கு வரும் போது கண்விழி மற்றும் முகஅடையாள பதிவை கட்டாயமாக்கிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், கிராமசபைக்கு பணிகளை தேர்வு செய்ய அதிகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளரும் இலளிகம் ஊராட்சி முன்னாள் தலைவருமான ஜே. பிரதாபன் தலைமை தாங்கினார். பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இறுதியாக, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜே. பிரதாபன் வழங்கினார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies