தருமபுரி, மே.15:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எல்நினோ விளைவுகளை எதிர்கொள்வது தொடர்பாக வல்லுநர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 14.05.2026 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியபோது, எதிர்வரும் மாதங்களில் உலகளாவிய அளவில் எல்நினோ தாக்கம் காரணமாக கடும் வறட்சி நிலை உருவாக வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறினார். இதனை எதிர்கொள்ளும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மரக்கன்றுகள் நடுதல், குட்டைகள் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் உருவாக்குதல், தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். காலநிலை மாற்றத்தால் அதிக வெப்பம் மற்றும் மழைப்பொழிவு மாற்றங்கள் ஏற்பட்டு புதிய நோய்த்தொற்றுகள் உருவாகும் அபாயம் உள்ளதால், மாசுபாட்டை குறைத்து இயற்கை வளங்களை பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டிடங்களிலும் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் பருவமழைக் காலங்களில் ஒரு கோடி லிட்டர் வரை மழைநீரை சேகரிக்க முடியும் என்றும் தெரிவித்தார். பூமி வெப்பமடைதலை கட்டுப்படுத்த அதிகளவில் மரக்கன்றுகள் நடுதல், மழைநீர் சேமித்தல் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
பயிற்சி பட்டறையில் நிலத்தடி நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை, Gabion Checkdam with Recharge Well அமைப்பின் முக்கியத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் வல்லுநர்கள் விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ. ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட இயக்குநர் சு. சுந்தர்ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், சிறுதுளி இயக்க தலைவர் கே. மயில்சாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)