தருமபுரி, ஏப்ரல். 15:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் - 2026 நடைபெறவுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரூர் (தனி) தொகுதிக்குட்பட்ட ஜெயம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் இப்பயிற்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த பயிற்சிகளில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் செயல்முறைகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைத்து, வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து காலை மற்றும் பிற்பகல் என இரு அமர்வுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்ட தபால் வாக்கு பெட்டிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தின் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் — பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) — வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சிகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம், வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் நடைமுறைகளை முழுமையாக புரிந்து கொண்டு, பிழையற்ற மற்றும் சீரான வாக்குப்பதிவை உறுதி செய்வதாகும். வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாக்குப்பதிவின் போது ஏதேனும் சந்தேகங்கள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடியாக மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் இன்றி தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தருமபுரி மற்றும் அரூர் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் - 2026 ஐ அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
.gif)

.jpg)