தருமபுரி, ஏப்ரல். 15:
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கோடைகால வெப்ப அலைக்கு முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், வீடுகளை குளிர்ச்சியாக வைத்திருக்க திரைச்சீலைகள், காற்றோட்ட வசதிகள் மற்றும் பிரதிபலிப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர், ORS மற்றும் அத்தியாவசிய மருந்துகளை முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வெளிப்புற வேலைகள் மற்றும் பயணங்களை அதிகாலை அல்லது மாலை நேரங்களில் திட்டமிட வேண்டும். வெளிர் நிற, தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை நேரங்களில் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், எலுமிச்சை நீர், இளநீர் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. வெளியில் செல்லும் போது தலைக்கவசம், குடை, சன்ஸ்கிரீன் மற்றும் கண்ணாடி பயன்படுத்த வேண்டும்.
வெளிப்புற தொழிலாளர்களுக்கு சுத்தமான குடிநீர், நிழல் மற்றும் ஓய்வு இடைவெளிகள் வழங்கப்பட வேண்டும். கடுமையான வேலைகளை அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வெப்பத்தை குறைப்பதற்காக குளிர் கூரை தொழில்நுட்பம், பிரதிபலிப்பு பெயிண்ட், திரைச்சீலைகள் மற்றும் காற்றோட்ட வசதிகள் பயன்படுத்தப்பட வேண்டும். மின்சார சேமிப்பிற்காக ஏர் கண்டிஷனர் 24°C அல்லது அதற்கு மேல் வைத்திருக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கும் போதுமான நிழல் மற்றும் குடிநீர் வழங்கப்பட வேண்டும். அதிக வெப்ப நேரங்களில் அவற்றை வேலை செய்ய விடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி வழங்கி, அவசியமெனில் அருகிலுள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு, தங்களையும் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
.gif)

.jpg)