பாலக்கோடு, ஏப்ரல். 29:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் உள்ள பழமையான ஸ்ரீ பெருமாள் சுவாமி திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கி, புதிய விக்ரஹம் கரிகோல ஊர்வலம், ஆச்சார்ய அழைப்பு, பகவத் பிரார்த்தனை, யஜமானர் சங்கல்பம், புண்யாகவாசனம் உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அக்னி ஆராதனை செய்து கும்ப பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மாலை நேரத்தில் புதிய விக்கிரஹ பிரதிஷ்டை, அஷ்டபந்தனம், திருமஞ்சனம், அபிஷேகம் மற்றும் யாகசாலை ஹோமங்கள் நடைபெற்றன. இன்று காலை நடைபெற்ற முக்கிய நிகழ்வில், யாகசாலையில் பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு, அங்கிருந்து புனித கும்பங்களை ஊர் முக்கியஸ்தர்கள் தங்கள் தலை மீது ஏந்தி கோயில் கோபுர கலசத்திற்கு கொண்டு சென்று புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தினர்.
அப்போது திரண்டிருந்த பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என முழக்கமிட்டு பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலச புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெருமாள் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)