Type Here to Get Search Results !

தருமபுரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நீர் மோர் பந்தலை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.


தருமபுரி – ஏப்ரல் 10:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் “என் நாடு என் ஓட்டு” என்ற வாக்காளர் உறுதிமொழி மாணவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. “என் வாக்கு விற்பனைக்கல்ல” என்ற உறுதிமொழியையும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து எடுத்துக்கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து, “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா”, “விரல் நுனியில் தீர்ப்பை எழுதுவோம்” போன்ற வாசகங்களை முன்வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் “VOTE 100%” என்ற வடிவில் நின்று விழிப்புணர்வு செய்தனர். மேலும், கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டதுடன், “என் வாக்கு என் உரிமை” என்ற கருத்தை வலியுறுத்தும் செல்பி பாயிண்டில் மாணவர்கள் புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு பரப்பினர்.


இதனைத் தொடர்ந்து, தருமபுரி நான்கு ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து, தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் எம். வேட்ரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். குடிநீர், மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகள் தயார் நிலையில் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டது.


மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் திரு. சு. சுந்தர்ராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நகராட்சி ஆணையர், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies