தருமபுரி, ஏப்ரல். 14:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தருமபுரி மாவட்டத்தில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, போக்குவரத்து காவல், தீயணைப்புத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு படிவம் 12D வழங்கப்பட்டு, அஞ்சல் வாக்கு செலுத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விண்ணப்பம் அளித்துள்ள அலுவலர்கள் வாக்களிக்க ஏதுவாக, 17.04.2026 (வெள்ளிக்கிழமை), 18.04.2026 (சனிக்கிழமை) மற்றும் 19.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய மூன்று நாட்களில், அந்தந்த சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் அஞ்சல் வாக்குப்பதிவு மையங்கள் (Facilitation Centre) அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் அலுவலர்கள் தங்களது அஞ்சல் வாக்குச்சீட்டுகளை பெற்று, அங்கேயே வாக்கு பதிவு செய்து, வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அஞ்சல் வாக்குச்சீட்டுகளை வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தின் அனைத்து 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பணியாளர்கள் தங்களது வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)