தருமபுரி – ஏப்ரல் 02:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மல்லுப்பட்டியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, மேளதாளத்துடன் கல்லூரி மாணவியர்களுக்கு “தேர்தல் திருவிழா அழைப்பிதழ்கள்” வழங்கினார். இந்த அழைப்பிதழ்கள் மூலம், வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, “என் வாக்கு விற்பனைக்கல்ல” என்ற கருத்தை வலியுறுத்தும் உறுதிமொழியை மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர். ஜனநாயகத்தின் மதிப்பை காக்கும் வகையில், எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆளாகாமல், அச்சமின்றி வாக்களிப்போம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும், “தேர்தல் திருவிழா தமிழ்நாட்டில் பெருவிழா – விரல் நுனியில் தீர்ப்பை எழுதுவோம்” என்ற கருத்தை முன்னிறுத்தி, செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு, மாணவியர்கள் மற்றும் அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு பரப்பினர்.
அதேபோல், “என் நாடு என் ஓட்டு” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், ரோபோட் (Robot) மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயாராக உள்ளனவா என்பதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வாக்காளர்கள் எந்தவொரு அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்யவும், அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா வசதிகள் ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் திரு. சு. சுந்தர்ராஜன், காரிமங்கலம் வட்டாட்சியர் திரு. சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், கல்லூரி மாணவியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

