Type Here to Get Search Results !

85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வீட்டிலேயே தபால் வாக்குப்பதிவு – தேர்தல் அதிகாரிகள் ஆய்வு.



தருமபுரி – ஏப்ரல் 13:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு (057) சட்டமன்றத் தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களுக்கு வீட்டிலேயே தபால் வாக்குப்பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தேர்தல் பொது பார்வையாளர் திருமதி வந்தனா வைத்யா, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (13.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலேயே வாக்களிக்கும் வசதியாக, படிவம் 12D மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விருப்பமுள்ளவர்களுக்கு தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 13, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வாக்காளர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வாக்குப்பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மாவட்டம் முழுவதும் 68 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் கண்காணிப்பாளர், உதவியாளர், தேர்தல் நுண்ணறிவு அலுவலர், ஆயுதம் தாங்கிய காவலர் மற்றும் வீடியோ பதிவு அலுவலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இந்த குழுக்கள், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில், வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று, அடையாள ஆவணங்களை சரிபார்த்து, வாக்குச்சீட்டை வழங்கி, வாக்குப்பதிவு நடைபெற ஏற்பாடு செய்கின்றனர். மேலும், வாக்காளர்கள் எவ்வித தூண்டுதலுமின்றி தங்கள் வாக்கினை சுயமாக பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து, முத்துக்கவுண்டர் தெரு பகுதியில் வாக்காளர் தகவல் சீட்டுகள் (VIS) வழங்கும் பணிகளையும், பாலக்கோடு தெற்கு ஊராட்சி ஒன்றிய அண்ணா தொடக்கப்பள்ளியில் ECINET PRO App செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. அ. அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies