தருமபுரி, ஏப்ரல். 28:
கோடைக்காலம் தீவிரமாக தொடங்கியுள்ள நிலையில், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை நிலையங்களில் தரம் மற்றும் சுகாதார நிலைமைகளை கண்காணிக்க தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையரின் உத்தரவின் பேரில், மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் தருமபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஏமகுட்டியூர், உங்காரனள்ளி, குமாரசாமிபேட்டை, பென்னாகரம் சாலை, திருப்பத்தூர் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது,
- தயாரிப்பு நிலையங்களின் சுகாதாரம்,
- உபகரணங்களின் பராமரிப்பு,
- மூலப்பொருட்களின் தரம்,
- தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, பேட்ச் எண், லேபிள் விவரங்கள்,
- உணவு பாதுகாப்பு உரிமம் போன்றவை சரிபார்க்கப்பட்டது.
மேலும், ஐஸ் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரா என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
கண்டறியப்பட்ட குறைபாடுகள் மற்றும் நடவடிக்கை:
- உங்காரனள்ளி:ஐஸ்கிரீம் தயாரிப்பு நிலையத்தில் சுகாதார குறைபாடுகள், உரிமம் புதுப்பிக்காதது கண்டறியப்பட்டது.ரூ.2,000 அபராதம் விதித்து, 3 நாட்களில் குறைபாடுகளை சரி செய்ய உத்தரவு.
- குமாரசாமிபேட்டை:குல்பி, பாதாம், ரோஸ் மில்க் தயாரிப்பு நிலையத்தில் மூலப்பொருட்கள் முறையாக சேமிக்கப்படாதது கண்டறியப்பட்டது.ரூ.1,000 அபராதம்.
- பென்னாகரம் சாலை:பழக்கடையில் அழுகிய பழங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது.அருகிலுள்ள பேக்கரியில் கலப்பட தேயிலை மற்றும் சாயம் பூசப்பட்ட பச்சை பட்டாணி பறிமுதல்.இரு கடைகளுக்கும் தலா ரூ.1,000 அபராதம்.
அனைத்து விற்பனையாளர்களுக்கும் சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்கவும், தரமான மூலப்பொருட்கள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் பயன்படுத்தவும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் தொடர்ந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட அனுமந்தபுரம் பகுதிகளிலும் குளிர்பான மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)