Type Here to Get Search Results !

தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்: “₹5 லட்சம் கோடி கடன் பெற்ற திமுக அரசை அகற்ற வேண்டும்” என பேச்சு.


தருமபுரி – ஏப்ரல் 02:


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்–2026 முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரி மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பாமக வேட்பாளர்களான தருமபுரி சௌமியா அன்புமணி மற்றும் பென்னாகரம் தொகுதி வேட்பாளர் பாடி செல்வத்தை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.


பிரசாரத்தில் பேசிய அவர், “2021 தேர்தலில் அதிமுக–பாமக கூட்டணி 100% வெற்றியை பெற்ற மாவட்டம் தருமபுரி. அதே வெற்றியை இந்த முறையும் மக்கள் வழங்க வேண்டும். திமுகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்” என்று கூறினார். மேலும், “தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்–ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார்” என குற்றம்சாட்டினார்.

அவர் தொடர்ந்து, “கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு ₹5 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசை அகற்ற வேண்டும்” என்று விமர்சித்தார். போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து, இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.


மேலும், “அண்ணாநகர் சிறுமி வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற திமுக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. அதிமுக ஆட்சி அமைந்ததும் உண்மை வெளிச்சம் பார்க்கும்” என்றார். தொடர்ந்து, “அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல. தமிழக நலனுக்காக தேவையான இடங்களில் கடுமையாக போராடியுள்ளோம். காவிரி விவகாரத்தில் பாராளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கியது அதிமுக” என்றும் அவர் குறிப்பிட்டார். இறுதியாக, “இரட்டை வேடம் போடும் திமுக அரசை மக்கள் நிராகரிக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies