தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள சமுதாய கூடத்தில், தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவ சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து “வெல்லும் கோரிக்கை மாநாடு” நடத்தினர்.
இந்த மாநாட்டில் பேசிய சங்க நிர்வாகிகள், தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும், 68,000 வாக்குச்சாவடிகளிலும் தங்களது சமூகத்தினர் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை கொண்டுள்ளனர் என்று தெரிவித்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 10,000 வாக்குகள் வரை உள்ள சமூகமாக இருந்தாலும், இதுவரை சட்டமன்றம் அல்லது பாராளுமன்றத்தில் தங்களது சமூகத்தைச் சேர்ந்தோர் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.
மேலும், தங்களது ஒற்றைக் கோரிக்கைகளுக்கும் இதுவரை எந்த அரசும் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும், வரவிருக்கும் தேர்தல்களில் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் தங்களது வாழ்வாதார கோரிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மூன்று அம்ச தீர்மானங்கள்:
1. இலவச மின்சாரம்:
நெசவாளர்களுக்கு 500 யூனிட்டிலிருந்து 1,000 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுவது போன்று, பாரம்பரிய முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
2. கல்வி இடஒதுக்கீடு:
மீனவர் சமூக மாணவர்களுக்கு மீன்வளக் கல்லூரியில் 5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதுபோல், தமிழ்நாடு அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகளில் பாரம்பரிய மருத்துவர் சமூக மாணவர்களுக்கும் 5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுகுறித்து சட்டநாதன் ஆணையம் பரிந்துரை செய்திருந்தாலும், இதுவரை எந்த அரசும் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
3. சுதந்திரப் போராட்ட வீரருக்கு மணிமண்டபம்:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, தனது 40 வயதுக்குள் 29 முறை சிறை சென்ற விடுதலை வேங்கை வீரர் தியாகி எஸ். எஸ். விஸ்வநாததாஸ் அவர்களுக்கு, தியாகிகள் மணிமண்டபம் வளாகத்தில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைத்து அரசு விழா நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டின் இறுதியில், “எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எங்கள் சமூக மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டோம்” என்று ஒருமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662