Type Here to Get Search Results !

தருமபுரி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 602 மனுக்கள் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி, மார்ச் 2:


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று (02.03.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 602 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இஆப., அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.


மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர், பேருந்து சேவை உள்ளிட்ட அடிப்படை தேவைகள், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித் தொகைகள் தொடர்பாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் வேண்டியும் மனுக்கள் அளித்தனர்.


மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டு, தகுதியான மனுக்களுக்கு அரசின் விதிமுறைகளின்படி உடனடி தீர்வு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.


இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 8 நபர்களுக்கு ரூ.59,803/- மதிப்பீட்டில் தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்புப் பெட்டிகள் வழங்கப்பட்டன. மேலும், பழங்குடியினர் நலத்துறை சார்பில், நலவாரிய அடையாள அட்டை மூலம் 2 நபர்களுக்கு ரூ.1.65 இலட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரணம் மற்றும் விபத்து உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.


தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில், 2024-25ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுகள் 5 சிறந்த சுய உதவிக்குழுக்கள், 1 கிராம வறுமை ஒழிப்பு சங்கம், 1 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் 1 பகுதி அளவிலான கூட்டமைப்பு என மொத்தம் 8 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன.


தொடர்ந்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருந்த மருத்துவத்துறை மருத்துவர் பூவரசன் அவர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.1.00 கோடி விபத்து காப்பீட்டுத் தொகை மற்றும் ரூ.10.00 இலட்சம் உயிர் காப்பீட்டுத் தொகை அவரது தந்தையின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வழங்கப்பட்டது.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு ரூபன் சங்கர் ராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி இரா. காயத்ரி (தருமபுரி), திரு செம்மலை (அரூர்), தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு சுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு மனோஜ் முனியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு ராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies