பென்னாகரம் - மார்ச். 17:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்காசனஅள்ளி அருகே உள்ள பாலிக்காடு கிராம மக்கள், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டி, தேர்தல் புறக்கணிப்பு அறிவித்து கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கிராமத்தில் சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நீண்ட காலமாக இல்லாத நிலை தொடர்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குறிப்பாக, அரக்காசனஅள்ளி முதல் பாலிக்காடு செல்லும் தார்சாலை 2021ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டும் இதுவரை பணிகள் நிறைவேறவில்லை என்றும், தற்போது அந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த சாலையிலிருந்து பள்ளி மற்றும் அங்கன்வாடி செல்லும் சுமார் 1 கி.மீ நீள மண் சாலை கடந்த 30 ஆண்டுகளாக சரிசெய்யப்படாமல் உள்ளது என்றும் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், கிராமத்தில் உள்ள பள்ளியில் கழிப்பிட வசதி இல்லாததால் மாணவர்கள் வெளியில் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முழுமையாக புறக்கணிப்போம் என்றும், தேவையானால் வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைப்போம் என்றும் கிராம மக்கள் எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு பேனர்கள் வைத்து, கருப்பு கொடிகள் கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)
.jpg)