பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் உள்ள கலசப்பாடி மலை கிராமம், அரூரிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதில் 16 கிலோமீட்டர் தூரம் செங்குத்தான மலைப்பாதை மற்றும் அபாயகரமான வளைவுகள் கொண்ட பகுதியாகும்.
இந்த கிராமத்திற்கு இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சாலை மற்றும் பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது. 1,500 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதி மக்கள், தங்களது விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், தினசரி வேலைகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக அரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரவும் கடும் சிரமம் அனுபவித்தனர். குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவர்கள் அதிக சிரமங்களை சந்தித்தனர்.
மாண்புமிகு தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கலசப்பாடி மலை கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. கடந்த வாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அந்த சாலையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மினி பேருந்து திட்டத்தின் கீழ் அரூரிலிருந்து கலசப்பாடி மலை கிராமத்திற்கு இன்று முதல் மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
துவக்க நிகழ்ச்சிக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்து கலசப்பாடி மலை கிராமத்தை சென்றடைந்தனர். வழியெங்கும் கிராம மக்கள் பேருந்து வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வே. சம்பத்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ரூபன் சங்கர் ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. அ.க. தரணீதர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)